சரக்குச் சங்கிலி-2: சங்க காலப் பண்டகச் சாலைகள்
ரமேஷ் டில்லிலிருந்து ...
தமிழன் கடல் கடந்து சென்று வியாபாரம் செய்தது ஒன்னும் புதுச் செய்தி இல்லை. திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு சொன்னது நம்ம முன்னோர்கள்தானே!
தமிழ்நாட்டின் கடலோரத் துறைமுகங்கள் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது. கொற்கை. பூம்புகார். காவேரிப்பூம்பட்டினம். மாமல்லபுரம்.
சங்க கால இலக்கியங்கள் பல விஷயங்களை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. கப்பலில் ஏற்றுவது அல்லது இறக்குவது ஒரு பக்கம். இந்த ஏற்றுமதி-இறக்குமதி வியாபாரத்தில் ஒரு முக்கிய அங்கம்: பொருள் சேகரிப்பு துறைமுகத்துக்கு அருகில்.
எல்லா பொருள்களையும் வெட்ட வெளியில் வைக்க முடியாது. போதாக்குறைக்கு, உடனுக்கு உடன் ஏற்ற கப்பல் அல்லது நாவாய் கிடைக்குமா என்பது சந்தேகம். அதே போல் , இறக்கும் பொருளை நாட்டுக்குள்ளே அல்லது நகரத்துக்குள்ளே கொண்டுச் செல்ல வண்டி உடனுக்குடன் கிடைக்குமா என்பதும் சந்தேகம்தான்.
அப்படியானால், வணிகர்கள் என்ன செய்தார்கள்? துறைமுகத்தினருகில் பண்டகச் சாலைகள் இருந்தனவா? இது என்னக் கேள்வி?
கட்டாயம் இருந்து இருக்க வேண்டும். எனவே, நாம் இப்போது பேசும் கோடௌன் (godown) அல்லது வேர்ஹவுஸ் (warehouse) இருந்து இருக்கிறது அந்தக்காலத்தில்.
சான்று? கடியலூர் உருத்திரங்கண்ணனார் எழுதிய சங்க கால பத்துப்பாட்டில் ஒன்றான பட்டினப்பாலையில் இந்த வரிகள் காணப்படுகிறது.
பண்டகசாலை முன்றில்
வான் முகந்த நீர் மலைப் பொழியவும்,
மலைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்,
மாரி பெய்யும் பருவம் போல,நீரினின்றும் நிலத்து ஏற்றவும்,
நிலத்தினின்று நீர்ப் பரப்பவும், 130
அளந்து அறியாப் பல பண்டம்
வரம்பு அறியாமை வந்து ஈண்டி,
அருங்கடிப் பெருங்காப்பின்
வலியுடை வல் அணங்கினோன்,
புலி பொறித்து புறம் போக்கி, 135
மதி நிறைந்த மலி பண்டம்
பொதி மூடைப் போர் ஏறி,
மழை ஆடு சிமைய மால் வரைக் கவாஅன்,
வரை ஆடு வருடைத் தோற்றம் போலக்,
கூர் உகிர் ஞமலிக் கொடுந் தாள் ஏற்றை 140
ஏழகத் தகரோடு உகளும் முன்றில்; (126-141)
முதல் வரியிலேயே சொல்லிவிட்டார்: பண்டகச்சாலை.
நாலு வரிகள் தள்ளி,
நீரினின்றும் நிலத்து ஏற்றவும்,
நிலத்தினின்று நீர்ப் பரப்பவும்,
இறக்குமதி. ஏற்றுமதி.
இந்த பண்டகச்சாலைலே, என்ன இருக்கு?
அளந்து அறியாப் பல பண்டம்
வரம்பு அறியாமை வந்து ஈண்டி,
அருங்கடிப் பெருங்காப்பின்
பல பண்டம்!
எவ்வளவு?
வரம்பு அறியாமை.
இன்னொரு விஷயம் கவனித்தீர்களா? அது என்ன அருங்கடிப் பெருங்காப்பின்?
பெருங்காப்புன்னா, பெரியபண்டகச் சாலை. மாஸ்டர் வேர்ஹவுஸ். (Master warehouse)
ஒகே? இத்தனைப் பண்டங்கள் இருக்கு. ஒரு பாதுகாப்பு வேண்டாம்? நிச்சயமாக. அதைத்தான், சொல்றேன்:
எப்படிப்பட்ட பாதுகாப்பு? அருங்கடி. நன்கு பாதுகாக்கப்படுகிறது. அடேயப்பா! பலமானது.
ஏனோ தானோன்னு இல்லாம, அரசாங்க அலுவலர்கள் இருக்கிறர்கள். என்ன பண்ணராங்க? வரி வசூல். பிறகு, அனுமதிக்கப்பட்ட மூட்டைகள் மேலே சோழ நாட்டு புலி முத்திரை பொ திக்க படுகிறது.
வலியுடை வல் அணங்கினோன்,
புலி பொறித்து புறம் போக்கி,
அனுமதி சான்றிதழ். நன்கு அமைக்கப்பட்ட செயல்முறை. லஞ்சம் இருந்ததா? ஆராய வேண்டும். பண்ணுவோம்.
மீண்டும் சந்திப்போம்.
சரக்குச் சங்கலி-1: ஒரு அறிமுகம் படிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்
Comments
Post a Comment