சரக்குச் சங்கிலி-6: அடேங்கப்பா, இத்தனை லாபமா?



ரமேஷ் குமார் டில்லியிலிருந்து 


சரக்கு ஏற்றிச் செல்லும் கப்பல் கம்பெனிகள் லாப வெள்ளத்தில் மிதக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகைப்படுத்தல் ஆகாது. 100 சதவிகிதம் உண்மை. கோவிட் வந்ததின் விளைவு எனலாம். எப்படி?

கோவிட் சீனா "ஏற்றுமதி" செய்த யாரும் ஆர்டர் செய்யாத ஒரு வியாதி. வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்ட ஒரு வேண்டாத பொருள். வருடம் 2019 கடைசியில் ஆரம்பித்த இந்த கூத்து முடியும் என்று யாருக்கும் தெரியாது. இந்த சர்வதேச பரவல் (Pandemic) ஒரு நாட்டையும் விட்டு வைக்கவில்லை. அமெரிக்காவிலிருந்து ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஈரான், ஜப்பான், ரஷ்யா, பிரேசில், அர்ஜென்டினா, இந்தியா  வரை பரவல். 

1918ல் கூட இந்த மாதிரி ஒரு சர்வதேச பரவல் (Spanish Flu) ஏற்பட்டு லக்ஷக் கணக்கானவர்கள் மடிந்தனர். அப்போதைக்கும் இப்போதைக்கும் ஒரு பெரிய வித்யாசம்: நூறு வருடங்களுக்கு முன் உலக நாடுகள் மத்தியில் வியாபாரம் இருந்தது. 

ஆனால், இன்றைய அளவில் இல்லை. தவிர, சீனாவின் மீது சார்பு இன்றைய அளவில் இல்லை. கடந்த 30 ஆண்டுகளில் சீனாவின் ஏற்றுமதி பங்கு தீவிரமாக ஏறிப்போய் விட்டது. 

உலக வர்த்தக அமைப்பின் (World Trade Organization) கணிப்புப்படி சீநாவின் உலக அளவு வியாபாரம் 15 சதவிகிதமெனக் கணிக்கப்படுகிறது. உலக வியாபாரம் அளவு: 28 டிரில்லியன் அமெரிக்கன் டாலர்கள். இங்கு நாம் சீனா  உலகத்தின் உற்பத்தி மையம் என்பதை மறக்கக் கூடாது. உதாரணமாக, அமெரிக்கா சீனாவில் இருந்து 457 பில்லியன் டாலர் மதிப்புடைய பொருள்களை இறக்குமதி செய்கிறது. இந்தியா: 125 பில்லியன் டாலர்.

இந்த பொருள்கள் கடல் மார்க்கமாக அனுப்பப்படுகிறது. இதற்கு 20 TEU அல்லது 40 TEU கண்டெய்னர்கள் உபயோகிக்கப்படுகிறது. இன்றைக்கு, ஆசியாவிலிருந்து (சீனா) அமெரிக்கா செல்லும் ஒரு 40 TEU கண்டைனர்க்கு சுமார் 14,000 அமெரிக்கா டாலர் கப்பல் கூலி. சில வருடங்களுக்கு முன்பு, சுமார் 2,000 அமெரிக்கா டாலர்தான். 2021ல் இந்த கப்பல் வாடகை 20,000 டாலரைத் தொட்டது. பத்து மடங்கு உயர்வு.

இந்த கோவிட் சகாப்தத்தில், மருந்து கம்பெனிகள் தவிர சரக்கு கப்பல் கம்பனிகள்கூட கொள்ளை லாபம் சம்பாதித்தன. 150 பில்லியன் அமெரிக்கா டாலர் 2021ல் லாபம் ஈட்டினார்கள் என தெரியவருகிறது.

ஆனாலும், கோவிட் வருமுன் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் கடும் நஷ்டம் சந்திக்க வேண்டியிருந்தது. காரணம்: தேவை வழங்கல் பொருத்தமின்மை (demand-supply mismatch). தேவைக்கும் அதிகமான சரக்கு கப்பல்கள். வியாபார போட்டியில், வாடகையை குறைக்க வேண்டியதாயிற்று. கோவிட்  ஒரு கடவுள் கொடுத்த வரப்பிரசாதம் என தோன்றுகிறது! முக்கியமாக சைனாவுக்கு. அதன் ஏகாதிபத்தியம் குறையுமென்று தெரியவில்லை. நல்லதா? கெட்டதா? யோசிக்க வேண்டும். 

இந்த மாதிரியான கப்பல் வாடகை பண வீக்கத்தை (inflation) பலப்படுத்துமென பொருளாதார வல்லுநர்கள் கவலைப் படுகின்றனர். 15 சதவிகித சரக்கு செலவு (கன்டைனர் கூலி உட்பட) 0.01 சதவிகித பணவீக்கத்தை அதிகமாக் கும் என்று கணிக்கப்படுகிறது. 

இன்றைய நிலையில், கப்பல் வாடகை குறையுமென்று தெரியவில்லை. 25 வருடங்களுக்குமுன் சுமார் 20 கப்பல் கம்பெனிகள் உலக வர்த்தகத்தை நடத்தின. இன்று 10 கம்பெனிகள் நடத்துகின்றன. பல நாடுகளில் இந்த மாதிரியான கட்டுப்பாடற்ற கடல் வர்த்தகத்தை (uncontrolled maritime trade) நிறுத்தி ஒரு ஒழுங்குமுறையை கொண்டு வரவேண்டும் என்று குரல் எழுப்பி இருக்கிறார்கள்.  

இந்த 10 கப்பல் கம்பெனிகள் ரகசியமாக ஒன்று சேர்ந்து கப்பல் வாடகையை ஏற்றிக்கொண்டே போகிறார்களா என்ற கேள்வி எழும்பி இருக்கிறது. ஒலிகொபோலியோ (oligopoly)? யார் கண்டது?

என்ன நடக்கிறது என்று பார்ப்போம். 







Comments

Popular posts from this blog

கார் ரேஸ்: மஸ்கா போடுகிறார்கள் எலன் மஸ்க்கு

சர்க்குச் சங்கிலி-9: அமேசான் ஹீரோவா, வில்லனா?

சரக்குச் சங்கிலி-10: கனடா டிரைவர் தடுப்பூசி எதிர்ப்புப் போராட்டம்